11/30/2013

கூகுளின் காணொளி ஆலோசனை சேவை, ஹெல்ப் அவுட்ஸ் அறிமுகம்

http://lovewebbers.com/wp-content/uploads/2013/08/videos.jpg
காணொளி ஆலோசனை, காணொளி உரையாடல் வசதி, நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோசனை...
தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ள கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் வசதி இப்படி எல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கூகுளின் இந்தப் புதிய அறிமுகம் இணைய உலகில் உண்டாக்கியிருக்கும் பரபரப்பையும் இந்த வர்ணனைகள் உணர்த்துகின்றன.
பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வசதி, காணொளி மூலம் அதாவது வீடியோ வழியே துறை சார்ந்த நிபுணர்களுடன் நேரடியாக ஆலோசனை பெறுவதற்கான வழி. இதன் மூலம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். புதிய விஷயங்களில் பயிற்சி பெறலாம். வழிகாட்டி குறிப்புகளோடு உடனடி ஆலோசனைகள் சாத்தியமாகும்.
கூகுளிடம் ஏற்கனவே உள்ள காணொளி உரையாடல் சேவையான கூகுள் ஹாங்க் அவுட் நீட்சியாக இந்த கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவுன் சான்பிரான்சிஸ்கோ நிகழ்ச்சியில் கூகுள் இதை அறிமுகம் செய்துள்ளது.
நிஜமான மனிதர்களிடம் இருந்து, நிஜமான உதவி, உடனடியாக! என்று கூகுள் ஹெல்ப் அவுட் இந்த சேவையை வர்ணித்து கொள்கிறது. (மேலும் ஒரு வர்ணனை). இந்த சேவை மூலமாக குறிப்பிட்ட துறையை சேர்ந்த நிபுணர்களிடம் காணொளி மூலம் நேரடியாக ஆலோசனை பெறலாம். மேக்-அப் செய்வதில் துவங்கி, சமையல் கலை, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது போன்ற விஷயங்கள் தொடர்பாக நிபுணர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு காணொளி வழியே விளக்கம் பெறலாம். இப்போதைக்கு கலை மற்றும் இசை, சமையல் கலை, அழகு கலை உள்ளிட்ட ஏழு துறைகளில் இந்த ஆலோசனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். முதல் கட்டமாக ஆயிரம் நிபுணர்கள் வரை கூகுள் தேர்வு செய்துள்ளது. நிபுணர்கள் மட்டும் அல்லாமல் நிறுவங்களும்கூட இடம்பெற்றுள்ளன.
காணொளி ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண விகிதங்கள் மாறுபடலாம். கூகுள் குறிப்பிட்ட சதவீதத்தை தனது கமிஷனாக எடுத்து கொள்கிறது. இந்த சேவை மேலும் பல துறைகளில் மேலும் எண்ணற்ற நிபுணர்களுடன் விரிவுபடுத்தப்பட உள்ளது. மருத்துவ துறைக்கான சேவையை பொறுத்த வரை கூகுள் மிகவும் கவனமாக அணுக உள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் இணையவாசிகள் ஹெல்ப் அவுட் இணையதளத்தில் நுழைந்து தாங்கள் தெளிவு பெற விரும்பும் துறையை சேர்ந்த நிபுணர்களை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம்.
இதை முற்றிலும் புதிய சேவை என்று சொல்வதற்கில்லை. இணையம் மூலம் அலோசனை வழங்கும் மற்றும் பாடம் நடத்தக்கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. ஆலோசனை சேவைகளை பொறுத்தவரை ஆர்வம் உள்ள இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை கற்றுத்தர முன்வரலாம். இந்தியாவிலே கூட இது போன்ற இணைய சேவைகள் இருக்கின்றன. காணொளி கல்வி வழங்கும் இணைய தளங்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த வகையான பயிற்றுவித்தல் முறையே எதிர்கால கல்வியின் திசை என்கின்றனர். அதே போல எப்படி எனும் கலையில் வழிகாட்டும் இணையதளங்களும் நிறையவே இருக்கின்றன.
இந்தப் பிரிவில் தான் கூகுள் அடியெடுத்து வைத்துள்ளது. நிபுணர்களுடன் நேரடியாக உரையாடி ஆலோசனை பெறுவதை சாத்தியமாக்கும் இந்த சேவை எந்த அளவுக்கு பிரபலமாகிறது என்று பார்க்கலாம்.
போட்டி மிகுந்த பிரிவில் கூகுள் அறிமுகம் செய்துள்ள இந்த சேவையின் நோக்கம் பற்றியும் இணையவெளியில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகி உள்ளன. இந்த சேவை தனிப்பட்ட வகையில் விஷேசமானதல்ல. ஆனால் கூகுள் கண்ணாடி அணிந்து கொண்டு பயன்படுத்தும் போது இதன் பலன் பலமடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் கூகுள் கண்ணாடியின் சிறப்பம்சங்களை பயன்படுத்தி கொள்ளும் திட்டத்துடனே கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சேவை எப்படி எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வழிகாட்டி தளங்களை பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இணையம் சாமானியர்களையும் நிபுணர்களாக்கி ஆலோசனை வழங்க வழி செய்திருக்கும் நிலையில் இந்த சேவை தொழில் சார்ந்த நிபுணர்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்து சாமான்ய நிபுணர்களை பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com