11/30/2013

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா

இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.
ஆசிரியர், மாணவர்...
தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது இந்தி.
உலகளவில் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 60-வது இடத்தில் இருந்தாலும் கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் தமிழ் 40-வது இடத்திற்குள் உள்ளது. கட்டுரைகளின் தரமானது அதன் நீளம், நம்பகத்தன்மை, கொடுக்கப்படும் சான்றுகளை பொறுத்தது. இந்தியில் ஒரு வரி கட்டுரைகளைக் கூட கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் தமிழில் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்’ என்று தமிழ் விக்கிபீடியாவின் ஏற்பாட்டாளர் ரவிசங்கர் கூறினார். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் தமிழில் அறிவியல், சமயம், பண்பாடு என்று பல துறைகளைப் பற்றிய கலைகளஞ்சியம் தொகுக்கப்படுகிறது.
3 ஆண்டுகளாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர், சூர்ய பிரகாஷ் கூறுகையில், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வழியில் பொறியியல் கற்று வருகிறேன். எனவே விக்கிபீடியாவில் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவேன். அது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது தவிர, விக்கிபீடியாவில் எழுதுவதை எளிமையாக்க பல மென்பொருட்கள் உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.
விக்கிபீடியாவில் பெண்கள்
தமிழில் தொடர்ந்து எழுதும் 285 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். இதில் சென்னையிலிருந்து எவரும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களின் பங்கை ஊக்கவிப்பதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation) சேர்ந்த நப்பின்னை கூறுகையில், விக்கிபீடியாவில் பெண் அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் பற்றிய தகவல் மிக குறைவு. இதனை ஊக்குவிப்பதற்கு ’விக்கி ஃபொர் விமன்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் கல்லூரிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளான ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரிகளில் உள்ள ஆர்வமிக்க இளம் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
தொடர் கட்டுரைப் போட்டி
தமிழ் விக்கிபீடியா தொடங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அதன் தரத்தை உயர்த்தவும் புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் தொடர் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை நடக்கும் இப்போட்டியில் ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகள் பங்களிப்பவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com