செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்காக 62 இந்தியர்கள் உட்பட 1058
பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு
நிறுவனமான மார்ஸ் ஒன் என்ற நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான
அறிவிப்பை வெளியிட்டது. நல்ல உடல் நலம் மற்றும் மன நலத்துடன் இருப்பவர்கள்
இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இவ்வாறு அழைத்துச்
செல்லப்படுபவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது என்பது
குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்திலேயே மக்கள் வாழத்தகுந்த காலனிகள்
உருவாக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்படுவர். இந்த பயணம் வரும்
2024ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையடுத்து 140 நாடுகளிலிருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் மார்ஸ்
ஒன் நிறுவனத்திற்கு வந்தன. இவற்றில் 1058 பேர் முதற்கட்டமாக செவ்வாய்
கிரகத்திற்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 297 பேர்
அமெரிக்காவையும், 75 பேர் கனடாவையும் சேர்ந்தவர்கள். 62 இந்தியர்கள்
மற்றும் 52 ரஷ்யர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.
இது தொடர்பாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் மார்ஸ் ஒன் நிறுவனத்தின்
தலைவர் பாஸ் லாண்ட்ராப் கூறுகையில், இத்திட்டத்திற்காக 2 லட்சம்
விண்ணப்பங்கள் குவிந்ததைக் கண்டு வியப்படைந்ததாக தெரிவித்தார். இந்த 2
லட்சம் விண்ணப்பங்களில் இருந்து நல்ல உடல்நலம் மற்றும் மன நலம் கொண்டவர்களை
தேர்வு செய்யும் பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறினார். இந்த
திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இ மெயில் மூலம் தகவல்கள்
அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்படாதவர்கள் அடுத்தடுத்து நடக்கும்
தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு
செய்யப்பட்டவர்கள் 2014 மற்றும் 2015ம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த கட்ட
சோதனைக்கு அழைக்கப்படுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment