சீனாவில் இயங்கிவரும் டெக்சோ டிராவல் என்ற நிறுவனம் தனது உயர் ரக
வாடிக்கையாளர்களை முன்னிட்டு நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயண
நிறுவனம் ஒன்றுடன் விண்வெளிப்பயணத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் நேற்று
கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் வரும் 2014ஆம் ஆண்டிலிருந்து சீன சுற்றுலாப் பயணிகளும்
விண்வெளிப்பயணத்தை அனுபவிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான எக்ஸ்சிஓஆர் தயாரிக்கும்
லின்க்ஸ் மார்க்-1 என்ற விண்கலம் இந்தப் பயணத்திற்கு உபயோகப்படுத்தப்படும்.
இந்தப் பயணத்திற்காக 5,80,000 யுவானைப் பயணிகள்
செலுத்தவேண்டியிருக்கும். விண்வெளிப்பயணத்திற்கு முன்னால் ராயல் டச்சு
நிறுவனமோ அல்லது ஏர் பிரான்ஸ் நிறுவனமோ இந்தப் பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு
உடல் தகுதிப் பயிற்சிகளை அளிக்கும்.
ஒரு விண்கலத்தில் ஒரு பைலட்டுடன் இணைபைலட் இருக்கையில் அமர்ந்து ஒரு
பயணி மட்டுமே செல்லமுடியும். பூமியிலிருந்து புறப்பட்ட 60 நிமிடத்திற்குள்
சுற்றுப்பாதையை அடையும் இந்த விண்கலம் 20 நிமிடங்கள் பூமியை
சுற்றிக்கொண்டிருக்கும்.
அந்தசமயத்தில் சுற்றுலாப்பயணி பூமி மற்றும் விண்வெளியின் அழகைக் கண்டு
ரசிக்கலாம் என்று சீன சுற்றுலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான சங்
யோங் தெரிவித்துள்ளார்.
வரும் 2014 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் தனது பயணங்களைத் தொடங்கும்
என்று எதிர்பார்க்கப்படும் லின்க்ஸ் மார்க்-1 பயணிகளை துணை விண்வெளியில் 60
கி.மீ உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டில் பயணங்களைத் தொடங்க உள்ள லின்க்ஸ் மார்க்-2 103 கி.மீ
உயரம் வரை செல்லும் என்று ஆசியாவின் விண்வெளிப் பயணத் திட்ட நிறுவனத்தின்
தலைமை அதிகாரியான அலெக்ஸ் டங் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வகை விண்கலத்தில் செல்ல 100 பயணிகளுக்கு ஒதுக்கீடு
செய்திருப்பதாகக் கூறும் அலெக்ஸ் சீனர்கள் இந்தப் பயணத்தில் மிகவும் ஆர்வம்
காட்டுவதால் ஆறு பயணங்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
இரண்டாம் வகைப் பயணத்திற்கு இது போன்ற எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment